சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடைதிறப்பு மற்றும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலங்களில் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான உணவகங்கள், சிற்றுண்டி நிலையங்கள், புத்தக நிலையங்கள் உள்ளிட்டவை ஏலம் விடப்படுவது வழக்கம்.
இத்தனை ஆண்டுகளாக சபரிமலை கடைகளுக்கான ஏலம் சுமங்கலி மண்டபத்தில் நேரடியாகவே நடைபெற்று வந்தது. ஆனால், இதில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஒப்பந்ததாரர்கள் சிண்டிகேட் அமைத்து, தங்களுக்குள் முன்கூட்டியே பேசி முடிவு செய்து ஏலத்தொகையை மிகக் குறைவாகவே கேட்பது வழக்கமாக இருந்தது.
போர்டு நிர்வாகம் தொகையைக் குறைக்க மறுத்தால், அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏலத்தில் பங்கேற்காமல் விலகி நிற்பார்கள். ஏலம் எடுக்க யாரும் முன்வராத நிலையை உருவாக்கி, போர்டை நிர்பந்தித்து முதலில் 10 சதவீதமும், பின்னர் 25 முதல் 50 சதவீதம் வரையிலும் தொகையைக் குறைக்க வைப்பார்கள்.
இந்தக் கூட்டு மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக முதன்முறையாக இந்த ஆண்டு முதல் இ-டெண்டர் மற்றும் இ-ஏல முறையை தேவஸ்வம் போர்டு அமல்படுத்தியது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 23 வரை பெறப்பட்டன. இதற்கிடையே டெண்டர் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, இ-டெண்டரில் கலந்துகொண்ட புதிய ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் மற்றும் கோப்புகள் மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு பழைய ஒப்பந்ததாரர்களுக்குக் கசியவிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்ததாரர் ஒருவருக்கு, டெண்டரில் பங்கேற்கக் கூடாது எனவும் சபரிமலைக் கடைகளைப் பல ஆண்டுகளாக நாங்கள்தான் எடுத்து நடத்தி வருகிறோம் என்றும் வெளிப்படையாகவே மிரட்டல் அழைப்பு சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் உடனடியாக தேவஸ்வம் போர்டு தலைவரிடம் முறையிட்டதுடன், தேவஸ்வம் விஜிலென்ஸ் பிரிவிடமும் புகார் அளித்தார்.
துறை ரீதியான முதற்கட்ட விசாரணையில் ஊழியர்களின் சதித்திட்டம் அம்பலமானது. இந்த ஏல நடைமுறைகளை தேவஸ்வம் கமிஷனர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சபரிமலைப் பிரிவு கையாண்டு வருகிறது.
இந்நிலையில், ஏலம் சம்பந்தமான தகவல்களை வெளி நபர்களுக்குக் கூறியதாகச் சந்தேகிக்கப்படும் தேவஸ்வம் கமிஷனர் அலுவலகத்தின் சபரிமலைப் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் சபரிமலை செயல் அலுவலர் அலுவலக அதிகாரிகள் தற்போது தேவஸ்வம் விஜிலென்ஸ் பிரிவின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இவர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ய விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதே சமயம், கடைகள் ஏலம் போகாமல் முடங்கினாலும் கூட, நிர்ணயிக்கப்பட்ட டெண்டர் தொகையைக் குறைக்கப் போவதில்லை என்பதில் போர்டு நிர்வாகம் உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























darknet markets onion address darknet site