கோவை மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடியுமா?… ஆம், இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சில பழங்குடி கிராமங்கள் இத்தனை ஆண்டுகளாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
அவற்றில் ஒன்றாக மழைக்கு ஒழுகும் குடிசைகள், பாதியில் நிற்கும் வீடுகள், இருளில் தவிக்கும் மக்கள் என அடிப்படை வசதிகளுக்கே அல்லாடி வருகிறது, கூமாட்டி என்ற கிராமம்.
பாதியில் நிற்கும் வீடுகள்!
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது கூமாட்டி பழங்குடியினக் கிராமம். இங்கு சுமார் 45 பழங்குடியினக் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடுகளும் கடந்த மூன்று ஆண்டுகளாக முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து கூமாட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் கூறுகையில், “எங்க கிராமத்துல 45 குடும்பங்கள் இருக்கு. இதுல 22 குடும்பங்களுக்குப் புதுசா வீடுகள் கட்ட ஆரம்பிச்சாங்க. ஆனா மூனு வருசமாகியும் வீடுகள் முழுசா கட்டி முடிக்கல. எல்லா வீடுகளும் பாதியில நிக்குது. மூனு வீடுகள் கட்ட குழி எடுத்தும், எந்த வேலையும் ஆரம்பிக்கவே இல்ல.
ஏற்கனவே இருந்த குடிசை வீடுகளுக்கும் மழைக்கு ஒழுகும். இப்ப புதுசா கட்டுற வீட்டுலயும் கூரை இல்ல. இதனால தகரச் சீட்டுகளை வைச்சு செட் போட்டு இருக்கிறோம். மழை வந்தா தகரச் சீட்டும் ஒழுதும். உள்ள உட்கார கூட முடியாது. அதனால தகரச்சீட்டுக்கு மேல தார்ப்பாய் போட்டு சமாளிச்சிட்டு வரோம்.
இது சம்பந்தமா அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், கட்டித் தரோம்னு சொல்லுறாங்களே தவிர, இப்ப வரை கட்டி தந்த பாட்ட காணோம்” எனக் குற்றம்சாட்டினார்.
’வெளிச்சம் தராத சோலார் லைட்’
தொடர்ந்து பேசிய அவர், ”எங்க கிராமத்துல கரெண்டு வசதி இல்ல. தெருவிற்கு மட்டும்தான் சோலார் பல்ப் போட்டு தந்திருக்காங்க. எல்லா வீட்டுலையும் மண்ணெண்ணெய் விளக்குதான் இருக்கு. மழை வந்தா சோலார் பேட்டரியில் சார்ஜ் ஏறாது.
வெயில் இருந்தா கொஞ்சம் ஏறும். ஆனாலும் நைட் ஆறுல இருந்து எட்டு மணி வரைக்கும்தான் சோலார் தெரு லைட் எரியும். இதனால எங்க கிராமமே இருளுல தவிக்குது. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாம நாங்க அல்லாடுறோம்” என வேதனை தெரிவித்தார்.

‘பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?’
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம் கூறுகையில், “கூமாட்டி கிராமத்துல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய வீடுகள் கட்டுற பணி தொடங்கி, மூன்று ஆண்டுகளாகியும் முழுமை பெறல.
இதனால அந்தக் கிராம மக்கள் நிம்மதியாகத் தூங்குவதற்குக்கூட கூரை இல்லாம, வீடு இல்லாம தவிக்குறாங்க. அவர்களுக்கெனக் கட்டப்படுகிற கட்டுமான பணிகளும் ஏனோ தானோ என ஆமை வேகத்தில் நடக்குது. இதுமட்டுமல்ல, தரமற்ற முறையில வீடு கட்டுறாங்க. இந்த வேலையைச் சீக்கிரம் முடிச்சு தரமான வீடுகள் கட்டித் தர வேண்டும்.
இதேமாதிரி கூமாட்டிக்குப் பக்கதுலயே மானாம்பள்ளி பவர் ஹவுஸ் இருக்கு. அங்க தயாரிக்குற மின்சாரம் எங்கெங்கோ கொண்டு போறாங்க. ஆனா பக்கத்துலயே இருக்குற வீடுகளுக்கு தருவதில்லை. புதைவட மின் கம்பிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக மின் வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஒரே குடும்பத்தில இருக்குற பாதி பேரை வால்பாறை நகராட்சியிலும், பாதி பேரை வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியிலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யுறனால, அவர்கள் வாக்களிக்க முடியாம போகுது. இதைத் தவிர்க்க கூமாட்டி பழங்குடியின மக்கள் அனைவரையும் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி வாக்காளர்களாகப் பதிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
இருளில் தவிக்கும் பழங்குடிகள் வாழ்விற்கு விடியல் வருமா?…
























