"தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது" காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது.

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது"

உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த முறையும் அதிகப்படியான இடங்களில் வெல்ல பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மேற்கு உத்தர பிரதேசம் சஹரன்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் சாயல் உள்ளதாக சாடிய பிரதமர் மோடி, "சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த காங்கிரஸிலிருந்து தற்போதைய காங்கிரஸ் விலகியுள்ளது. அக்கட்சி தேசிய நலனுக்கான கொள்கைகளையோ அல்லது தேசிய வளர்ச்சிக்கான பார்வையையோ கொண்டிருக்கவில்லை.

"பிரதமருக்கு வரலாறு தெரியவில்லை"

நமது அரசாங்கம் உண்மையான மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியை கடைப்பிடிக்கிறது. ஏனெனில், பயனாளிகளுக்கு இடையே எங்கள் திட்டங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை" என்றார்.

அயோத்தி ராமர் கோயில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தது குறித்து பேசிய பிரதமர் மோடி, "பாஜக லட்சியத்தால் இயக்கப்படுகிறது. காங்கிரஸ் கமிஷன் சம்பாதிக்க வேலை செய்கிறது. முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் பயன் அளிக்கவில்லை.

இஸ்லாமிய குடும்பங்களுக்கும் உதவுகிறது. எந்தத் தந்தையும் சகோதரனும் தன் மகளோ சகோதரியோ வீடு திரும்புவதை விரும்புவதில்லை. முத்தலாக்கிற்கு எதிரான கடுமையான சட்டத்தை கொண்டு வந்ததற்காக முஸ்லிம் பெண்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும், எனக்கு நன்றி கூறுவார்கள்" என்றார்.

இதற்கு காங்கிரஸ் சார்பில் பதிலடி அளிக்கப்பட்டுள்ளது. "வங்காளத்தில் முஸ்லீம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தது வேறு யாரும் அல்ல. அப்போதைய ஹிந்து மகாசபாவின் தலைவரான முகர்ஜி.  உண்மையில், பிரதமருக்கு வரலாறு தெரியவில்லை. சிந்து மற்றும் வடமேற்கு மாகாணத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணியில் இருந்தது இந்து மகாசபை. பிரித்தாளும் அரசியலை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும் பாஜக தான், காங்கிரஸ் அல்ல" என்றார்.

இதையும் படிக்க: தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி – பகீர் ரிப்போர்ட்

Source link