தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை; எதிர்க்கட்சிகள் தாக்கப்படுகிறதா?


மக்களவை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தல்:
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வருமான வரித்துறை சோதனை:
இந்த சூழ்நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர்களின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகின்றது. 
நேற்று இரவு, தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகரும் , திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்ததால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. 
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டிலுள்ள சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, நெல்லை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
பணப்பட்டுவாடா தொடர்பான புகாரையடுத்து வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கோவையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சில இடங்களில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், அரசியல் கட்சியினர் மீதான வருமான வரித்துறையினரின் சோதனையானது, பெரும் பேசு பொருளாகி உள்ளது. 
இதுகுறித்து , எதிர்க்கட்சியினர் தெரிவிக்கையில், ஆளும் கட்சியின் அடக்குமுறை என்றும், அரசு இயந்திரங்களை வைத்து எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்ப இது போன்ற செயல்களில் ஆளும் கட்சி ஈடுபடுகிறது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Source link