நடிகர் சங்க முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மரணம் திரைத்துறை, அரசியல் தளம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக தரப்பில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 24ஆம் தேதி அதாவது நாளை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள்,உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.