ஜி 20 அமைப்பில் இந்தியா பங்கேற்று உள்ள நிலையில் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்க உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
ஜி-20 அமைப்பில் இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளும் வளர்ந்த நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச பொருளாதாரம், பருவநிலை மாற்றம், உள்ளிட்ட பிரச்சனைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை இந்த அமைப்பு எடுத்து வருகிறது.
இவ்வாறே கௌரவமிக்க இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இந்த சூழலில் ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஓமன் பிரதமர் மற்றும் சுல்தான் ஹைதம் பின் தாரிக், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் இந்தியா வந்தடைந்தனர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்கும் வகையில் டெல்லியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாநாடு முறைப்படி தொடங்குகிறது. மாநாட்டின் தொடக்கமாக ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாது சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றுவார்.
ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் தலைநகரின் முக்கிய பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.
ஜி-20 மாநாட்டை முன்னிட்டு விமான நிலையம் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் என அனைத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.