Tamil Nadu Villupuram 3-Year-Old Child Krutisha Can Name All 195 Countries Identify Their Flags


உலகில் எத்தனையோ நபர்கள் தினம் தினம் பல வகையான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அதிலும், குறிப்பாக குழந்தைகள் பலரும் நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனைகளை  செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று வருகின்றனர்.
சாதனை படைத்த 3 வயது சிறுமி:
சமீபத்தில் கூட, ஆந்திராவில் கைவல்யா என்ற நான்கு மாத குழந்தை உலக சாதனை படைத்தது.  இந்த சிறு வயதிலேயே 27 பறவைகள், 27 பழங்கள், 27 காய்கறிகள், 27 விலங்குகள், 12 பூக்களின் படங்களை மிக சரியாக அடையாளம் காட்டி சாதனை படைத்தது. 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நம் தமிழ்நாட்டில் இரண்டு வயது குழந்தை சாய் சித்தார்த்  சாதனை படைத்தார். அதாவது, உலக வரைப்படங்கள், கண்டங்கள், தேசிய கொடிகள் பெயர்களை கூறி அசத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் மற்றொரு குழந்தை சாதனை படைத்துள்ளது. 
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சௌமியா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது குழந்தை கிருத்திஷா (3). இவரது பள்ளிக்கு மூன்று வயது குழந்தையான கிருத்திஷாவை அழைத்து சென்ற தாய் சௌமியா, தினம் தினம் பொது அறிவு தொடர்பான சில பாடங்களை கற்றுக் கொடுத்து வந்தார்.
195 நாடுகளின் பெயர்களை சொல்லி சாதனை படைத்த சிறுமி:
அப்போது, குழந்தை கிருத்திஷா சில புகைப்படங்களில் இருக்கும் பெயர்களை சரியாக சொல்லி இருக்கிறார். குழந்தையால் மனப்பாடம் செய்து சொல்ல முடிகிறது என்பதை அறிந்த தாய் சௌமியா, குழந்தைக்கு நாடுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் கொடிகளை அடையாளம் காணுவதற்கு கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்.  
அதன்படியே, குழந்தை கிருத்திஷாவுக்கு நாள்தோறும் சொல்லிக் கொடுத்தார்.  இந்த நிலையில் தான், மூன்று வயது குழந்தையான கிருத்திஷா உலகில் உள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் கொடிகளை அடையாளம் காண்பித்து சாதனை படைத்துள்ளார்.
195 நாடுகளின் கொடிகளை சொல்லிக்கொண்டு இடைவெளி இல்லாமல் அடையாளம் கண்டுள்ளார் மூன்று வயது குழந்தை.  இதுகுறித்து அவர் தாய் சௌமியா கூறுகையில், “என் குழந்தை இப்போது 195 நாடுகளின் கொடி பெயர்களை இடைவிடாமல் சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நானும் என் கணவரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது என் குழந்தைக்கு கற்பிக்க செலவிடுகிறோம். கிருத்திஷா பெரிய விஷயங்களைச் சாதிக்க நிச்சயம் ஆதரவளிப்போம். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறினார். 

மேலும் படிக்க
Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..

மேலும் காண

Source link