Tamil Nadu Lok Sabha Election 2024 Schedule: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை இன்று ( மார்ச்16 ) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டிற்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே, ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலானது ஒரே கட்டமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலுடன், தமிழ்நாட்டில் உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி உள்பட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.
மக்களவை தேர்தல்:
இந்தியா முழுவதும் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலானது மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் எனவும் வேட்புமனு தாக்கல் நிறைவானது மார்ச் 27 எனவும் வேட்புமனு பரிசீலனை மார்ச் 28 எனவும், வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 எனவும், தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தொடங்கும் எனவும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்:
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு 6.19 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். தேர்தல்களை நடத்துவதற்காக 68,144 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், தேர்தலை அமைதியாக நடத்தவும் மத்திய துணை ராணுவப் படையினர் நேற்று சென்னை வந்து, கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகரில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்ட 25 கம்பெனி துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமைதியாக தேர்தலை நடத்தவும், போதைப்பொருள் கடத்தல், மதுபானக் கடத்தல், சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த துணை ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளன.
மக்களவை தேர்தலுக்குபின் வாக்குப்பதிவு முடிந்ததும், ஸ்டிராங் ரூம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்யும் பொறுப்பும் துணை ராணுவப் படைகளுக்கு உள்ளது.
2 கம்பெனி துணை ராணுவப் படைகள் (1 கம்பெனியில் சுமார் 90 வீரர்கள்) சென்னை வந்துள்ளனர். அதில், ஒரு குழு தற்போது எழும்பூரில் உள்ள சமூக நலக்கூடத்திலும், கே.கே.ஆரில் மற்றொரு குழுவும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இதேபோன்ற அணிவகுப்பு நடத்தப்படும் என்று துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஏராளமான துணை ராணுவப் படைகள் குவிக்கப்படும் என்று தெரிகிறது.
தேர்தல் அறிவிப்பு தொடர் நேரலை: Lok Sabha Election 2024 Dates LIVE: 97 கோடி வாக்காளர்கள்; 55 லட்சம் மின்னணு இயந்திரங்கள் – தலைமை தேர்தல் ஆணையர்