மீண்டும் ரயில் விபத்து… அதிர்ச்சியில் மத்திய அரசு…

மேற்கு வங்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் வைத்துள்ள இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. ரயில்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் – சாலிமார் அதிவிரைவு ரயில் வந்தபோது, நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடம் புரண்ட பெட்டிகளை மீட்டெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய ரயில்கள் தாமத‍மாக இயக்கப்படும் என்பதால், பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என்று ஒவ்வொரு விபத்தின்போதும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருப்பது, மத்திய அரசுக்கு தர்ம‍ சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.