பங்குனி உத்திர விழாவை ஒட்டி இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆரட்டு விழா நடைபெறுகிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள்.

இதனை தொடர்ந்து பங்குனி உத்திர விழா விமர்சையாக நடைபெறும். பங்குனி உத்திர விழாவை ஒட்டி மார்ச் 13 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 14 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினசரி காலை நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திர திருவிழா 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழா கொண்டாட்டத்தில் சிறப்பம்சமாக உத்சவ பூஜை நடைபெறுகிறது. இன்று பங்குனி உத்திர திருவிழா அதாவது 10 ஆம் நாளான இன்று ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக பம்பையில் ஆரட்டு விழா நடைபெறும். இதனை தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்கப்படும். பின் வழக்கமான இரவு பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு மேற்கொள்கிறது.

மண்டல பூஜை மற்றும் மகர ஜோதியை தொடர்ந்து அதிக நாட்கள் நடை திறக்கப்படிருப்பதே இந்த காலகட்டம் தான். பங்குனி மாதம் முடிந்து சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இதில் முக்கிய விஷேச நாளான சித்திரை விஷு ஏப்ரல் 14 ஆம் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.