Republic Day 2024 Ahead Of The Republic Day Celebrations 5 Layers Of Security Have Been Put In Chennai | Republic Day 2024: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்க தடை

குடியரசு தினம்:
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறும். இந்த விழாவில் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும்.
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.  குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
இந்த நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தை  முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதுமே 7500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் முழுவதும் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், , துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
ட்ரோன்களுக்கு தடை:
மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மாதவரம் பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் அதிகாரிகளின் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு, மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் நாச வேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை  மீறும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
குடியரசு தின கொண்டாட்டம்! சிறப்பு விருந்தினராக இன்று இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர்!

Source link