Ravindra Jadeja: பொறுப்பான ஆட்டம்; பேட்டிங்கில் க்ளாசிக் ஷோ காட்டிய ஜடேஜா; சதம் விளாசி அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசி அட்டகாசப்படுத்தியுள்ளார். இவர் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழ்ந்து இந்திய அணி தத்தளிக்கும்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கைகோர்த்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டார். பொறுப்புடன் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா 198 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி சதத்தினை எட்டினார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் படி இந்திய அணி பேட்டிங்கினைத் தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கம் மிகவும் சொதப்பலாக அமைந்தது. இந்திய அணியின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ரஜித் படிதார் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர்.

அவ்வளவுதான் இந்திய அணியால் இந்த போட்டியில் கம்பேக் கொடுக்க முடியாது என நினைத்த போது, அணியில் உள்ள சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும் ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  ஜடேஜா அரைசதம் விளாச, ரோஹித் சர்மா சதம் விளாசினார். ரோஹித் சர்மா 131 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அப்போது ஜடேஜா 83 ரன்கள் குவித்திருந்தார்.

அதன் பின்னர் வந்த சர்ஃப்ராஸ் கான் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை மிகச் சிறப்பாக கையாண்டு வேகமாக அரைசதம் விளாசினார். இதனால் ஜடேஜா மிகவும் குறைந்த பந்துகளையே எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மேலும் தான் எதிர்க் கொண்ட பந்துகளையும் பொறுப்பாக எதிர்கொண்டு டிஃபென்ஸ் பேட்டிங் செய்துவந்தார்.

ஜடேஜா 99 ரன்களில் இருந்தபோது ஒரு ரன் அடிக்க பந்தை மிட் ஆன் சைடில் அடித்துவிட்டு ஓட நினைத்தார். ஆனால் அதற்குள் மார்க் வுட் அந்த பந்தை பிடிக்க, ஜடேஜா ரன் எடுக்க ஓடி வரவில்லை. இதனால் நான் – ஸ்ட்ரைக்கர் திசையில் நின்ற சர்ஃப்ராஸ் கான் கிரீஸ்க்குள் செல்வதற்கு முன்னர் மார்க் வுட் அவரை ரன் அவுட் செய்தார்.

இறுதியில் ஜடேஜா 198 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் விளாசியும் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டும் சதம் விளாசினார். இந்த சதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜடேஜாவின் இரண்டாவது சதம் ஆகும். மேலும் ராஜ் கோட் மைதானத்தில் ஜடேஜா விளாசிய இரண்டாவது சதம் ஆகும்.

Source link