Ranji Trophy Tamil Nadu Vs Karnataka Match Drawn Day 5 Elite Group C | Ranji Trophy: இறுதிவரை விறுவிறுப்பு; டிராவில் முடிந்த தமிழ்நாடு

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மிகவும் முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் என்றால் அது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தான். கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், குரூப் ’சி’ – யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதின. இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய கர்நாடக அணி 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 366 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் 151 ரன்கள் குவித்தார். இவர் 218 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசி கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் பலமான ஸ்கோர் குவிக்க காரணமாக இருந்தார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர்கள் சம்ரத் மற்றும் ஹர்திக் ராஜ் ஆகியோரது அரைசதமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. தமிழ்நாடு அணி சார்பில் ஜெகதீஷன் 40 ரன்களும் இந்ரஜித் 48 ரன்களும் சேர்த்திருந்தனர். 215 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகா அணிக்கு தமிழ்நாடு பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஜித்ராம் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கர்நாடகா அணி இறுதியில் 139 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. 
இதனால் 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக தமிழ்நாடு அணியின் இந்திரஜித் 2 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார். அவர் 194 பந்துகளில் 3 பவுண்டரி மட்டும் விளாசி 98 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை ரன் – அவுட் முறையில் இழந்தார். இந்ரஜித்தும் விஜய் சங்கரும் களத்தில் இருந்தவரை தமிழ்நாடு அணி வெற்றியை பெற்றுவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. 
ஆனால் 5வது நாள் ஆட்டத்தின் கடைசி 10 ஓவர்களில் கர்நாடகா அணி வீரர்கள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் போட்டி டிராவில் முடியும் சூழலுக்குச் சென்றது. 5வது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.  
குரூப் ’சி’யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தற்போது 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டியில் டிராவும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 22 புள்ளிகளுடனும் ரன்ரேட்டில் 0.448-லும் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 

Source link