PM Modi TN Visit: தமிழ்நாட்டிற்கு 3 நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை, திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்ய உள்ளார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி:
தமிழ்நாட்டில் இன்று தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளை, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதில் பங்கேற்று பிரதமர் மோடி போட்டிகளை மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர்ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதயொட்டி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கும் மோடி:
முதல் நாள் (ஜனவரி – 19)
பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி
விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்
ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார் பிரதமர் மோடி
காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரும் பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது
கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகையை சென்றடைகிறார் பிரதமர் மோடி
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரவு அங்கேயே ஓய்வெடுக்கிறார்
இரண்டாவது நாள் (ஜனவரி – 20)
சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்
காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறார்.
2.10 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதோடு, அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.
மூன்றாவது நாள் (ஜனவரி – 21)
ஞாயிற்றுக்கிழமை காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி புனித நீராடுகிறார்
தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.
காலை 10.25 முதல் 11 மணி வரை கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார்
11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை, திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசாருடன், 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட சில மார்கங்களில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல புன்னிய ஸ்தலங்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.