Police Step Up Vigil, Security Beefed Up At Delhi Borders Amid Farmers’ ‘Delhi Chalo’ Call On march 6 | Farmers Protest 2.0: இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்


Farmers Protest 2.0: விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி எல்லை, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டம்:
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இவற்றை நிறைவேற்றக் கோரி, கடந்த மாதம் 13ம் தேதி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், ஹரியானா மற்றும் டெல்லி எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை கொண்டும் தாக்கப்பட்டனர். இதில் ஒரு விவசாயி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டாம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
இன்று மீண்டும் தொடக்கம்:
இந்நிலையில் தான், விவசாயிகளின் போராட்டத்தை முன்னின்று நடத்தும் இரண்டு முக்கிய அமைப்புகளான கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா,  நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மார்ச் 6ம் தேதி டெல்லிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தன. அதனைதொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10-ம் தேதி நாடு தழுவிய நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளின் போராட்டம் இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இதில், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பார்கள் என, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

#WATCH | Shambhu Border: Farmer leader Tejveer Singh says, “Tomorrow, on March 6, farmers from all over India will march peacefully towards Jantar Mantar in Delhi. Farmers from Madhya Pradesh, Rajasthan and Bihar have made all preparations to move to Delhi for the march…” pic.twitter.com/2k2xKJKX9Q
— ANI (@ANI) March 5, 2024

எல்லையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு:
விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு, திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூர் எல்லைகளில் டெல்லி காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஏற்கனவே குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய எல்லைகளில் தடுப்புகள், முள்வேலி போன்றவற்றை அமைத்து, விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இதனால், இன்று டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. 

மேலும் காண

Source link