PM Modi Tomorrow tamilnadu visit chennai 5 layer security and he attend public meeting nandhanam | PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்! நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி


PM Modi TN Visit: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. 
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:
பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் நான்காவது முறையாக ஒருநாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கடந்த வாரம்  தமிழகம் வந்த பிரதமர்  மோடி, பல்லடம் மற்றும் நெல்லையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். 
கடந்த 4 நாட்களில் 2வது முறையாக நாளை தமிழ்நாடு வர உள்ளார் பிரதமர் மோடி.  இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் பயண விவரம்:
மகாராஷ்ராவில் இருந்து நாளை புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி.  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.20 மணியளவில் கல்பாக்கம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக  கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பார்வையிடுகிறார்.
தொடர்ந்து, அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம்  வந்தடைகிறார் மோடி. விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, நாளை மாலை 5 மணிக்கு நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு சென்றடைகிறார்.  அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நாளை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கிறார். 
சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு:
பிரதமர் வருகையையொட்டி, சென்னை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  நந்தனம், YMCA மைதானம், சென்னை விமான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த ‘அணு ஆயுதம்’
Polio Camp: இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

மேலும் காண

Source link