சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முழு விவரம்:
ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும். அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, இடர்கள் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.
இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, அந்தந்த பகுதி பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவு பகலாகத் தொடர்ந்து செயலாற்றினர். இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டனர். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹஜ் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுவரும் மாற்றங்கள் முழுமையாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. நமது இஸ்லாமிய தாய்மார் – சகோதரிமார்கள், இது தொடர்பாக எனக்கு நிறைய எழுதியிருக்கிறார்கள். இப்போது அதிகம் பேர்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியோர், குறிப்பாக நமது தாய்மார்-சகோதரிகள் கடிதங்கள் வாயிலாக எனக்கு நல்லாசிகள் வழங்கியிருக்கிறார்கள். இது மிகவும் உத்வேகமளிப்பதாக இருக்கிறது.
இன்று தேசத்தின் நாலாபுறத்திலும் அமுதப் பெருவிழா எதிரொலிக்கும் வேளையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசத்தின் மேலும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையிலே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
இந்த ஆளுமைகளின் நினைவாக, தேசத்தின் இலட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துக்களில், சிறப்புக் கல்வெட்டுக்களும் நிறுவப்படும். இந்த இயக்கத்தின்படி தேசமெங்கும் அமுதக் கலச யாத்திரையும் மேற்கொள்ளப்படும்.
தேசத்தின் கிராமம் தோறும், பட்டி தொட்டிகளிலிருந்தும், 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை, தேசத்தின் தலைநகரான தில்லியை வந்தடையும். இந்த யாத்திரையானது, தன்னோடு கூடவே தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, மண்ணோடு சேர்ந்து செடிகளையும் கொண்டு வரும். 7,500 கலசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும், செடிகளையும் சேர்த்து, தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலே அமுதப்பூங்காவனம் நிர்மாணிக்கப்படும்.
கடந்த ஆண்டு சுதந்திரத் திருநாளன்று, வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்திற்காக, எப்படி நாடு முழுவதும் ஒருங்கிணைந்ததோ, அதே போல நாம் இந்த முறையும் மீண்டும், வீடுகள்தோறும் மூவண்ணத்தைப் பறக்க விட வேண்டும்.
இவ்வாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.