கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
பாஜகவுக்கு சவாலாக மாறிய தமிழ்நாடு:
ஆனால், பாஜகவுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது தோல்வியில் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், எப்படியாவது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கும் முனைப்பில் பாஜக இருந்து வருகிறது. ஆனால், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸை தவிர்த்து பாஜக கூட்டணியில் புதிதாக யாரும் இணையவில்லை.
இந்த நிலையில், என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, திமுக, காங்கிரஸ், I.N.D.I.A கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிமுக வாக்குகளை குறிவைக்கு பிரதமர் மோடி:
அனைவரையும் வியப்படைய செய்யும் வகையில், முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். விரிவாக பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாடு வந்திருக்கும் இந்த வேளையில் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன். இலங்கைக்கு சென்றபோது எம்.ஜி.ஆர். பிறந்த இடமான கண்டிக்கு சென்றேன். இன்று அவர் வாழ்ந்த தமிழகத்திற்கு வந்துள்ளேன். கல்வித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் அவர். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரவில்லை.
ஏழைகள் பெண்களுக்கு எம்.ஜி.ஆர். செய்த நன்மைகள் அதிகம். ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதியை எம்.ஜி.ஆர். ஏற்படுத்தினார். அவரை கேவலப்படுத்தும் விதமாக தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக எம்ஜிஆரை அவமதிக்கிறது. திமுக அரசியலால் தமிழ்நாட்டுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆருக்கு பிறகு சிறப்பான ஆட்சியைத் தந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தனர். நல்லாட்சி தந்து தமிழ்நாட்டுக்கு கல்வியையும் சுகாதாரத்தையும் கொடுத்துள்ளனர்” என்றார்.
மீண்டும் கூட்டணியா?
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசியது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, அதிமுகவுடன் பாஜக ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக திமுக கூறி வரும் சூழலில், அதிமுக குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியது பல சந்தேகங்களை கிளப்பும் விதமாக உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோடியின் பேச்சால் தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால், அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கவே பிரதமர் மோடி இப்படி பேசியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் காண