நிலச்சரிவில் புதைந்த 2000 பேர்… 7900 பேரை வெளியேற்றும் அரசு… எங்கே தெரியுமா?

ப‍ப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்த நிலையில், 7900 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு வடக்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய தீவு நாடான ப‍ப்புவா நியூ கினியாவில் கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் உயிரழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டது.

ஆனால், மண்ணை தோண்ட தோண்ட சடலங்களாக கிடைத்த‍தால், எத்தனை பேர் புதையுண்டார்கள் என்ற கேள்வி எழுந்தது. 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.நா அவைக்கு, ப‍ப்புவா நியூ கினியா நாட்டின் தேசிய பேரிடர் ஆய்வு மையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில், கடந்த 24 ஆம் தேதி நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிரோடு புதைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது. பல அடி உயரத்திற்கு மண் குவிந்துள்ளதால், அவற்றை அகற்றிவிட்டு தேடும் பணி மிகவும் கடினமாக இருப்பதாகவும், பல்வேறு தரப்பினர், தொடர்ந்து தேடும் பணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிக்கு கூடுதலாக படைகள் தேவைப்படுவதாகவும், நிலச்சரிவில் புதைந்த வீடுகளை முழுமையாக சோதனை செய்த பின்னரே எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற முழு விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் அடுத்த‍டுத்து பாறைகள், வெடிக்கும் சத்தம் கேட்பதாகவும், துப்பாக்கி சுடுவது போன்று பலத்த சத்தம் கேட்டு வருவதகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ஆபத்து ஏற்படும் என கணிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுமார் 7900 பேரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர். மீண்டும் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டால், அது மிகப்பெரிய பாதிப்பாக மாறும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.