நாகையில் சிபிசிஎல் ஆலைக்கு எதிரான உண்ணாவிரதம் நிலை இதுதான்… அதிகாரிகளின் முடிவால் எடுத்த முடிவு…

பனங்குடி சிபிசிஎல் எண்ணெய் ஆலையை கண்டித்து  11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம், பேச்சுவார்த்தைக்கு திரும்ப‍ப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சிபிசிஎல் எண்ணெய் ஆலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்கள், தங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் கேட்டு, கடந்த 11 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டம் காரணமாக பனங்குடியில் 6 மாவட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதனிடையே, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நில அளவீடு செய்ய சென்ற வருவாய்த்துறையினர், சிபிசிஎல் நிறுவன அதிகாரிகளை பணிகளை மேற்கொள்ளவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாத‍மும், பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், பனங்குடி கிராம மக்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், நாகையில் வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம், நில வழங்கிய தகுதியுள்ள உரிமையாளர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பனங்குடி கிராம மக்கள், 11 நாட்களாக நடத்தி வந்த தங்களது உண்ணாவிரத போராட்டத்தை திரும்ப‍ப் பெறுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பனங்குடியில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத பந்தலை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாமாக அப்புறப்படுத்தி, அங்கிருந்து கலைந்து சென்றனர்.