மாடர்ன் தியேட்டர்ஸ்.. அதை அப்படி பார்க்க‌க்கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்…

மாடர்ன்ஸ் தியேட்டர் விவகாரத்தில் கற்பனையாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசு பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாடர்ன் தியேட்டர்ஸ் பகுதியில் அரசின் சார்பில் ஏதோ செய்யப் போகிறோம் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவுகிறது என்றும், ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்றும் கூறினார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை விரிவாக்கம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகள் அளவீடு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டதில்லை என்ற அவர், விபத்துகளை குறைக்க அந்த கூட்டங்களை 28 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது என்றும் கூறினார். சாலை ஆக்கிரமிப்பால் விபத்து நிகழ்வதாக பல்வேறு தரப்பினரும் அந்த கூட்டத்தில் சொல்வதாக தெரிவித்த‌ அமைச்சர், சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்திருப்பதாகவும், அதன்படி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை, அளந்து பார்த்து கல் நடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் ஏற்காடு சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல் நடபட்டுள்ளதாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு, அதை மாடர்ன் தியேட்டர்ஸாக பார்க்கக் கூடாது என்றும் ஏற்காடு சாலையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

கல் போட்டவுடன் கற்பனையாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசு பதில் சொல்ல முடியாது என்ற அமைச்சர், அங்கு எந்தவித கட்டுமானம் செய்யவோ, சிலை வைக்கும் திட்டமோ இல்லை என்றும், நெடுஞ்சாலைத்துறை சொத்துக்களை அடையாளம் காணவே கல் போடப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.