Mary Kom steps down as India’s Chef de Mission for Paris Olympics | Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் இந்திய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மேரி கோம்


 உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக். கிரிக்கெட், கால்பந்து இல்லாமல் இதர அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கி நடத்தும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். இந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் ஒலிம்பிக் நடக்கிறது.
ராஜினாமா செய்த மேரி கோம்:
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. சமீபகாலமாக இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் பொறுப்பாளராக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டார்.
ஆனால், மேரி கோம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அவர் எழுதிய கடிதத்தில், “ பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்காக எனக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க தலைமை பொறுப்பை என்னால் ஏற்க முடியாது உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். என்னை முடக்கிய சில பிரச்சினைகள் காரணமாக விலகுகிறேன் 
என் உறுதிபாட்டில் இருந்து பின்வாங்குவது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. எனது நாட்டிற்கு எல்லா வழிகளிலும் சேவை செய்வதை நான் ஒரு மரியாதையாக கருதினேன். அதற்காக நான் மனதளவில் தயாராக இருந்தேன்.”
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேரி கோமின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைவர் விரைவில் நியமனம்:
தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்துள்ள மேரி கோமின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.டி.உஷா, மேரி கோமின் முடிவை மதிப்பதாகவும், அவரது கடிதம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு மாற்றான நபரை நியமிப்போம் என்று தெரிவித்துள்ளார். 41 வயதான மேரி கோம் குத்துச்சண்டையின் புதிய விதிப்படி, பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற முடியாது. குத்துச்சண்டை விதிப்படி 40 வயதுக்கு மேற்பட்டோர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இயலாது.
பாரீஸ் செல்லும் இந்திய வீரர்களுக்கான தலைவராக மேரி கோம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், துணை தலைவராக கேசவன் நியமிக்கப்பட்டிருந்தார். மேரி கோமிற்கு பதிலாக மாற்று நபர் நியமிக்கப்படும் வரை, கேசவன் பொறுப்பை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேரி கோம் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். அவர் 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர். மேரி கோம் உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link