Loksabha election 2024 election campaign in chengalapatu district edappadi palanisamy | EPS: ஜனநாயகம் முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுக


ஜனநாயகம் முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா. 17வது மக்களவையின் பதவிக் காலம்  வரும்  ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
முதல் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் மூன்று அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. ஏற்கனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டனர். வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ”தொழிற்சாலைகள் இயங்குவது கேள்விக்குறியாக மாறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நாம் தேர்தலை சந்திக்கிறோம்.
இது போன்ற தொழில்கள் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள். இன்றைய தினம் தமிழ்நாட்டை நோக்கி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் வலிமையான கட்சி அதிமுகவாக உள்ளது.
தீய சக்தி திமுக எனக் கூறி எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார் அன்றிலிருந்து இன்று வரை திமுக தீய சக்தியாக உள்ளது. பாஜகவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒன்றும் கள்ளத்தொடர்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பழக்க தோஷம் உங்களுக்கு இருப்பதால் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
எங்க கட்சிக்கும் உங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் வேண்டாம் என்றால் கூட்டணியில் இருந்து விலகுவது எங்களுடைய விருப்பம். திமுக பயம் வந்துவிட்டது. இதனால், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். திராணி தகுதி இருந்தால் சொல்லு, உங்கள் குடும்பத்தை தவிர்த்து, ஒருவர் திமுகவின் தலைவராக வருவார் என சொல்லுங்கள்.
மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெறாது. ஒருவேளை வெற்றிபெற்றால் எங்கள் குடும்பத்தை தவிர வேறு ஒருவர் முதலமைச்சராக வருவார் என்று தைரியம் இருந்தால் சொல்லுங்கள். உதயநிதிக்கு அடுத்தது இன்பநதி வருவார் என கூறுகிறார்கள் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மனசாட்சி இல்லாமல் பேசுகின்ற மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள்:. அவர்கள் அனைவரும் அடிமை போல் இருக்கிறார்கள். அண்ணா திமுக மட்டும் தான் சுதந்திரமாக ஜனநாயகம் முறைப்படி இயங்கும் ஒரே கட்சி” என்றார் எடப்பாடி பழனிசாமி. 

மேலும் காண

Source link