Lok Sabha Election 2024 Will DMK Alliance Seat Sharing Vck Asking For 3 Constituencies? – 2nd Round Of Negotiations Today | DMK – VCK Alliance: நெருங்கும் தேர்தல் – அடம்பிடிக்கும் விசிக

DMK – VCK Alliance: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களவை தொகுதியில் தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான பணிகளை கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என்பது போன்ற பணிகள் பல்வேறு கட்சிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் திமுக:
கடந்த ஜனவரி மாதம் முதலே கூட்டணி கட்சிகளுடன் திமுக, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோருக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், காங்கிரஸ், விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இதுவரை இறுதியாகவில்லை.  
3 தொகுதிகளை கேட்கும் விசிக:
தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, கடந்த தேர்தலில் 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்தலில் தங்களுக்கு 2 தனி மற்றும் ஒரு பொதுத்தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது விசிக வலியுறுத்தியுள்ளது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற தங்கள் கட்சி மாநாட்டின் பிரமாண்ட வெற்றியை காட்டி, இந்தமுறை தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், திமுக தரப்பில் இரண்டு தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும் என கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.  இதைதொடர்ந்து, திமுக – விசிக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2ம் தேதி நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டு கட்சிகள் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதில் சுமூக முடிவு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ், மதிமுக:
அதேநேரம், காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை, கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மதிமுகவிற்கோ ஒரு மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் எனவும், கடந்த முறை போல மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாது என்றும் திமுக கூறுவதாக தெரிகிறது. இதனால் இந்த கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடும் இன்னும் இழுபறியாகவே உள்ளது.

Source link