Lok Sabha Election 2024: புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் கல்லூரியிலிருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கியில் செலுத்த கொண்டு வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கெங்கராம்பாளையத்தில் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனையில் சிக்கிய 30 லட்சம் ரூபாய்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணபட்டுவாடா வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 21 தேர்தல் பறக்கும் படை குழுவினர் மற்றும் 21 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழுவினர் கெங்கராம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதகடிப்பட்டு பகுதியிலிருந்து வந்த காரினை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மதகடிப்பட்டில் இயங்கும் தனியார் கல்லூரியில் பணிபுரியக்கூடிய அன்பழகன் என்பவர் கல்லூரியின் நிதியான 30 லட்சம் ரூபாயை விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் செலுத்த எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதக் செய்து விழுப்புரத்தில் உள்ள முதன்மை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் அலுவலகத்தை ஒப்படைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவணங்கள் கொண்டு கொடுத்து தேர்தலுக்கு பின் வாங்கி கொள்ளுமாறு அதிகாரிகள் சீல் வைத்து வைத்தனர்.
பறக்கும் படை சோதனை
வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடங்கியது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.இந்நிலையில் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
21 பறக்கும் படைகள் அமைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படைகள் மற்றும் தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்புக்குழு வீதம் 21 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பறக்கும் படை குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 3 போலீசாரும், நிலையான கண்காணிப்புக்குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 2 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.
சோதனை தொடங்கியது
இதனைத்தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக் குழுவினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். இந்தக் குழுவினர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை யாரேனும் கொண்டு செல்கின்றனரா என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். இந்தக் குழுவினர் 8 மணி நேர முறைப்படி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண