அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவடைந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் தற்போது மக்களவைத் தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், வளரும் கட்சிகள் என்று அனைத்து கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்காக தங்களை கடந்த ஓராண்டாக தயார்படுத்தி வருகின்றனர்.

மக்களைவைத் தேர்தல்:

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவின் தாக்கம் பெரியளவில் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

ஆளுங்கட்சியான தி.மு.க. தன்னுடைய கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க., என பல பலமான கட்சிகளை கொண்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் கூட்டணியில் யார்? யார்? என்று இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.

கொங்கு மண்டலம்:

அ.தி.மு.க. முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுக்குள் அதாவது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அ.தி.மு.க. சந்திக்கும் முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து சந்தித்த அ.தி.மு.க., இந்த தேர்தலை பா.ஜ.க. இல்லாமல் எதிர்கொள்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சர்ச்சையான கருத்துகள் அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்களை கொந்தளிக்கச் செய்த நிலையில், கடந்தாண்டு அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிந்தது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிந்தது பலவித கருத்துக்களை உண்டாக்கினாலும் உண்மையில் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஜெயலலிதா போன்ற பெரிய ஆளுமை இல்லாமல் எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ். இணைந்து கடந்த முறை சட்டசபைத் தேர்தலை சந்தித்தனர். அதில் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட செல்வாக்கின் மூலமாக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு உதவியது.

வியூகம்:

இந்த மக்களவைத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலரும் கொங்குமண்டலம் என்பதாலும், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அதிகளவு இருப்பதாலும் மக்களவைத் தேர்தலில் மற்ற தொகுதிகளை காட்டிலும் கொங்கு மண்டல தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த அ.தி.மு.க. வியூகம் வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் தென்தமிழகத்தில் சசிகலா ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிகளவு இருப்பதாலும், தி.மு.க. வலுவாக இருப்பதாலும் அ.தி.மு.க.விற்கு வாக்குகளை கவர்வதால் சிக்கல் உள்ளது.

தி.மு.க.விற்கு சவால் அளிக்குமா?

ஆனால், ஏற்கனவே தாங்கள் வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் மேலும் களத்தில் இறங்கி பணிபுரிந்தால் இன்னும் அதிகளவு வாக்குகளை பெறலாம் என்று கட்சித் தலைமை நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த முறை ஆளுங்கட்சியாக இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. 40 தொகுதிகளையும் தி.மு.க.விடம் இழந்தது.

ஆனால், இந்த முறை கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் அ.தி.மு.க. களமிறங்குகிறது. எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு, வரும் சட்டசபைத் தேர்தல் உள்ளிட்டவற்றை கணக்கில் வைத்து மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களை வெற்றி பெற அ.தி.மு.க. முனைப்பு காட்ட திட்டமிட்டுள்ளது.

என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

கொங்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தினாலும் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் அதிகளவில் உள்ள தென் தமிழகத்திலும் அ.தி.மு.க. கடந்த முறையை காட்டிலும் அதிகளவு வாக்குகளை பெற வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை பா.ஜ.க.வைத் தவிர மற்ற பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டு வர அ.தி.மு.க. முனைப்பு காட்டும் என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த இரு கட்சிகளும் அ.தி.மு..க கூட்டணியில் இருந்தால் வட தமிழகத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது உண்மையாகும். இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வகுக்கும் வியூகம் என்ன? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.