கிருஷ்ணகிரி வெடி கடை வெடித்து சிதறி 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிலிண்டர் கசிவுதான் காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் வெடி கடை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவராண வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். படுகாயமடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நிவாரண தொகையை அமைச்சர் சக்கரபாணி பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
தடவியல் வல்லுநர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, மாவட்டத்தில் அனைத்து வெடி கடை உரிமையாளர்களையும் மாவட்ட நிர்வாகம் அழைத்து, எந்தெந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர பகுதிகளில் தான் அனைத்து வெடி கடைகள் இயங்கி வருவதாகவும், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.