சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சேலம் தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் திறந்து வைத்தார். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ஆம் தேதி கலந்து கொள்ள உள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பிரதமரின் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இறுதி செய்யப்பட்டு விடும். தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்த உடன் மற்ற கட்சிகளுடன் மாநில அளவில் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 11 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் என் மண் என் மக்கள் யாத்திரையின் 200 வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள அவர் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள 36 பணிக்குழு நிர்வாகிகளையும் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தற்போது மிகப்பெரிய எழுச்சியுடன் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியமும் தெய்வீகமும் தேவை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் தான் நேர்மையாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர். இத்தனை ஆண்டு காலமாக சமூக நீதிப் பேசியவர்கள் எல்லோருமே அவரவர் குடும்பங்களுக்கான வளர்ச்சியில் தான் கவனம் செலுத்தியுள்ளனர் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 11 நாள் இளநீரை மட்டுமே குறித்து பிரதமர் மோடி மேற்கொண்ட விரதம் தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரமைப்பையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் 95 சதவீத மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
தமிழக வளர்ச்சிக்கு எதுவும் செய்யாததால் தான் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கே.பி.ராமலிங்கம் அவர் முதலமைச்சர் ஆக இருந்தபோது சட்டமன்றம் மற்றும் பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரையில் மத்திய அரசு தமிழகத்தின் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அந்த உரைகளே அவரின் கேள்விக்கு பதிலாக அமையும் என்று கூறினார். பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை லேகியம் விற்பவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கே.பி.ராமலிங்கம் தமிழகத்தில் ஊழல் என்னும் நோயை விற்க பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை லேகியம் என்று வருகிறார் என்றும் குடும்ப கட்சி ஆட்சி முறையை ஒழித்து ஊழல் நோயை நீக்க அண்ணாமலை லேகியம் விற்று வருவது உண்மைதான் என்று பதில் அளித்தார்.
மேலும் காண