Kejriwal Arrest: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் கைது.. ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா பரபர!

தேர்தல் நெருங்கும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கைதாகும் எதிர்க்கட்சி தலைவர்கள்:

இப்படிப்பட்ட சூழலில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், இந்த இரண்டு கைதுகளும் தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன்பே முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் கெஜ்ரிவால் கைதை கண்டித்துள்ளனர். நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

சர்வதேச பிரச்னையாக வெடித்த கெஜ்ரிவால் கைது:

கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது. குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்திய குடிமகன்கள் போல் கெஜ்ரிவால் வழக்கிலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஜெர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஜெர்மனி நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்திய அரசு, "உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார்கள்" குற்றம் சுமத்தியது.

இந்த நிலையில், கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்க முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் கைதை கண்காணித்து வருவதாக கூறிய அமெரிக்கா, இந்த விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான, காலதாமதம் இல்லாத வகையில் வழக்கு நடத்தப்படும் என்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், இப்படி கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் கைது குறித்த ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து அமெரிக்காவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இந்த விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகம்தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்" என்றார்.

அமெரிக்க அரசின் கருத்துக்கு இந்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.

Source link