கரூரில் ஏர் ஹாரன் மூலம் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மினி பேருந்து ஓட்டுனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஏர் ஹாரன் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கரூர் மாநகரில் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் காவல்துறையுடன் இணைந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகில், வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பேருந்து ஓட்டுநர் முன்னே செல்கின்ற வாகனங்களை முந்தி செல்வதற்காக, அனுமதி இல்லாத ஏர் ஹாரனில் இருந்து அதிக ஒலி எழுப்பினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக போலீசார் அந்த மினி பேருந்தை நிறுத்தி அனுமதி இன்றி பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரனை பறிமுதல் செய்தனர். மேலும், ஒலி மாசு ஏற்படுத்திய குற்றத்திற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்தனர். பேருந்து நிறுத்தத்தில் அதிக ஒலி எழுப்பிய மினி பேருந்தின் ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் காண