Kamal Haasan: பரபரப்பான தேர்தல் சூழலுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்:
உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் ஒதுக்கப்பட்டது. மேலும், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று பரப்பரையை ஈரோட்டில் தொடங்கினார் கமல்ஹாசன். திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து ஈரோட்டில் பல இடங்களில் பரப்புரை மேற்கொண்டார் கமல்ஹாசன். இதனை அடுத்து, சேலத்தில் தனியார் ஹோட்டலில் தங்கினார் கமல்ஹாசன்.
இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலினும் சேலத்தில் தங்கியுள்ளார். நேற்று தருமபுரியில் பிரச்சாரத்தை முடித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், சேலத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று மாலை சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சேலம் வந்திருக்கிறார் ஸ்டாலின்.
பின்னணி என்ன?
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். தேர்தல் பணிகள், தேர்தல் பிரச்சார நிலவரம் உள்ளிட்டவற்றை பற்றி இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கமல்ஹாசன், “ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், ஸ்டாலின் அவர்களோடு உரையாடினேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம். ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பரப்புரை விவரம்:
மார்ச் 30ஆம் தேதி சேலம் (திமுக), ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி (மதிமுக), ஏப்ரல் 3ஆம் தேதி சிதம்பரம் (விசிக), ஏப்ரல் 6ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூர், சென்னை (திமுக), ஏப்ரல் 7 சென்னை (திமுக), ஏப்ரல் 10 மதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏப்ரல் 11 தூத்துக்குடி (திமுக), ஏப்ரல் 14 திருப்பூர் (இந்திய கம்யூனிஸ்ட்), ஏப்ரல் 15 கோவை (திமுக), ஏப்ரல் 16 பொள்ளாச்சி (திமுக) ஆகிய இடங்களில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
மேலும் காண