கள்ளக்குறிச்சி சம்பவம்… முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்… எல்.முருகன் வலியுறுத்தல்…

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவையும், காவல்துறையையும் கடுமையாக அவர் குற்றம்சாட்டினார்.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரப்பு தினம் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், இந்த சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், திமுக அரசின் கையாளாகாத்தனத்தை காட்டுவதாகவும், போலி திராவிட மாடல் ஆட்சி என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த‍தும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறினார்கள் என்றும், ஆனால், பல இடங்களில் மதுக்கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக அரசு இந்த சம்பத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த அரசு கள்ளச்சாராயத்திற்கு துணை போகின்ற அரசாக இருப்பதாகவும், உயிர்களை எடுக்கின்ற அரசாகவும் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த சம்பவம் என்பதால், பொதுவெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சம்பவம் நடந்து பலமணி நேரம் ஆகியும், முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை ஏன் பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாதிக்கப்பட்டோரை பார்க்க முடியாத முதல்வர் என்று விமர்சித்தார். சிபிசிஐடி விசாரணை என்பது சம்பவத்தை மூடி மறைக்கின்ற செயலாக பார்ப்பதாகவும், மரக்காணம் சம்பவத்திலும் அப்படித்தான் நடந்த‍தாகவும் எல்.முருகன் கூறினார்.

தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து திமுக கூட்டணிக் கட்சியினர் யாரும் வாய் திறக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ள எல்முருகன், திமுக அரசின் மீது விமர்சனங்களை முன்வைக்க அவர்கள் தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.