ஐபிஎல் 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸின் 17வது ஓவரின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா பந்துவீச்சை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நடந்தது. மோஹித் சர்மா வழக்கம்போல் ஒரு மெதுவாக பந்தை வீச அது வைட் ஆஃப் ஆக சென்றது. அப்போது அந்த பந்தை அடிப்பதற்காக சாம்சன் முயன்று கிரீஸின் உள்ளே சிறிது நகர்ந்து இருப்பார். அதற்கு ஆன்பீல்ட் அம்பயர் வைட் என அறிவித்தார்.
இதை ஏற்க மறுத்த கேப்டன் சுப்மன் கில்லும், குஜராத் அணியும் முடிவை சரியா என பார்க்க ரிவ்யூக்கு சென்றிருந்தனர். மூன்றாவது அம்பயர் ஆரம்பத்தில் இது சரியான பந்துவீச்சு போல் இருக்கிறது என்று தெரிவித்தார். அப்போது, வீடியோவில் சாம்சன் தனது ஷாட்டை ஆட முயன்று பந்தை நோக்கி சிறிது நகர்ந்தார். அந்த நேரத்தில் பந்தும் வைட் லைனை தாண்டி வெளியே சென்றதை பார்த்த மூன்றாவது அம்பயர், ஆன்பீல்ட் அம்பயர் கொடுத்த வைட் சரியே என அறிவித்தார்.
Gill was furious . These catch drops and fielding will cause us again..#RRvsGT pic.twitter.com/tAYnb1vCvS
— khushi (@vc975625) April 10, 2024
அது எப்படி பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு நகர்ந்தபோது பந்தை வைட் என அறிவித்தீர்கள் என சுப்மன் கில் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆன்பீல்ட் அம்பயர்கள் இரண்டு பேரும் சுப்மன் கில்லை சமாதானம் செய்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டி சுருக்கம்:
ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனின் முதல் தோல்வியை சந்தித்தது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 68 ரன்களும் எடுத்தனர். இதுபோக, ஹெர்மயர் கடைசி நேரத்தில் 5 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உதவியுடன் 13 ரன்கள் குவித்தார்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க அமைந்தது. சுப்மான் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இடையே 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஆனால் அதன் பிறகு அந்த அணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தது.
15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றிக்கு இன்னும் 73 ரன்கள் தேவைப்பட்டது. சுப்மன் கில் குஜராத்தின் மீட்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை 16வது ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் புத்திசாலித்தனமான பந்துவீச்சு மூலம் அவுட் செய்தார். கில் 72 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கடைசி 3 ஓவர்களில் குஜராத் அணிக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாருக் கான் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவேஷ் கானின் கைகளில் அவர் அவுட் ஆனார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சிறப்பாக விளையாடிய ரஷித் கான் இலக்கை விரட்ட உதவி செய்தார்.
மேலும் காண