தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு நடைபெற்ற தொடர்களை எல்லாம் விளையாடி முடித்துவிட்டது. இச்சூழலில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அதன்படி, சொந்த நாட்டில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி 14-ஆம் தேதியும் கடைசி போட்டி ஜனவரி 17-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதனிடையேதான் நேற்று பிசிசிஐ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணி வீரர்களை அறிவித்தது. அதன்படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றனர்.
அணியில் இடம்பெற்ற ரோஹித் – கோலி:
முன்னதாக, கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த தொடரில் விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் தான் இருவருமே அணியில் இடம் பெற்றனர்.
அதேநேரம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 போட்டி மற்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பின்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. காரணம் இந்திய அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்படும் ஹிட்மேன் ரோகித் சர்மா மற்றும் ரன்மிஷின் விராட் கோலி இருவரும் விளையாடாததுதான் என்பதுபோன்ற தகவல்கள் வெளியானது.
பிசிசிஐ பிளான்:
இதனால்தான் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் இருவருக்கும் அணியில் பிசிசிஐ இடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இருவரும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் உலகக் கோப்பை டி 20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டால் அது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாகவும், பார்வையாளர்களை அதிகப்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் பிசிசிஐ கருதுவதாக தெரிகிறது.
தல – தளபதி:
அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின்போது 50 வது ஒரு நாள் சதத்தை விராட் கோலி அடித்த போட்டியின்போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நேரலையில் அதிகமான ரசிகர்கள் பார்த்தது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க: T20 World Cup: T20 உலகக்கோப்பை தொடர்… ரோஹித் சர்மாதான் கேப்டன்.. அடித்துச்சொல்லும் ஆகாஷ் சோப்ரா
மேலும் படிக்க: Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் வெற்றி பாதைக்கு திரும்ப என்ன செய்யவேண்டும்? வர்ணனையாளர் டி.என்.ரகு கருத்து!