ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா பேட்டிங் செய்து வருகின்றனர்.

முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்?

இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக ரஜத் படிதார் களமிறங்கியுள்ளார். இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் அனுபவ வீரர் முகமது சிராஜ் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் பந்துவீச்சாளர் முகேஷ்குமார் களமிறங்கியுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் ஏன் களமிறக்கப்படவில்லை என்று கேப்டன் ரோகித்சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், “ கடந்த ஆறு மாதங்களில் எவ்வளவு போட்டிகள் அவர் ஆடியுள்ளார் என்று பாருங்கள். அதனால், அவருக்கு ஓய்வு அளிப்பது நல்லது என்று அளித்துள்ளோம். நாங்கள் முகேஷ்குமார், குல்தீப் யாதவை களமிறக்கி உள்ளோம். ரஜத் படிதார் அறிமுகமாகியுள்ளார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு பின்னடைவு:

முகமது சிராஜ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். அந்தாண்டு முதல் நடந்து வரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் முக்கிய பந்துவீச்சாளராக களமிறங்கி ஆடி வருகிறார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் பங்கேற்காத சூழலில், இன்றைய போட்டியில் முகமது சிராஜ் இல்லாததும் பெரும் பின்னடைவாக உள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்காத விராட் கோலி, இந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ள நிலையில், நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இல்லாததும் இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ( கேப்டன்), சுப்மன்கில், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, முகேஷ்குமார்.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்