புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநர் நியமனம்… பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம்… முழு விவரம்…

புதுச்சேரி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அசாம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன், குஜராத் மாநில முதல்வரின் முதன்மை செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த மாதம் தான் ஓய்வு பெற்றுள்ளார் கைலாஷ்நாதன். பிரதமர் மோடியின் மிக நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

இதே போன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக சந்தோஷ் குமார் பதவி வகித்தவராவார்.

ஜார்க்கண்ட் தெலுங்கானா புதுச்சேரி என மூன்று மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் சிபி ராதாகிருஷ்ணன் வகித்து வந்த நிலையில், தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநராகவும் சண்டிகரின் துணை நிலை ஆளுநராகவும் இருந்த பன்வாரிலால் புரோஹித் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராகவும் சண்டிகரின் துணைநிலை ஆளுநராகவும் குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் இருந்து குலாப் சந்த் கட்டாரியாவை பஞ்சாப்புக்கு மாற்றியதால், சிக்கிம் மாநில ஆளுநராக இருக்கும் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவை அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவுக்கு பதிலாக சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநிலத்தின் புதிய ஆளுநராக கர்நாடகாவை சேர்ந்த சி ஹெச் விஜய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஹரிபாபு கிசன்ராவ் பாக்டேவும், சட்டீஸ்கர் மாநில புதிய ஆளுநராக ரமேன் டெகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.