திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நீதி பயண விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் 65 அடி அளவில் கொடியேற்றுதல், பண்டிதர் ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜீவ் காந்தி மூவரின் முழு உருவ சிலை திறப்பு என முப்பெரும் விழா நடைபெற இருந்தது.
இதற்கு கொடி ஏற்றி வைத்து சிறப்பிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தங்கப்பாலு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கபாலு பேசியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய அளவில் மாற்றம் வரவேண்டும். தமிழகத்தில் வெற்றிக்கூட்டணி தான் மிகப்பெரிய கூட்டணி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தும் தெரியும். சரியான முடிவை எடுப்பார்கள் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகம் தான். ராகுல் காந்தி சாதிவாரி கணக்கு எடுப்பார் அதன் மூலம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த வில்லை. பாஜக வை எதிர்ப்பவர்களை அவர்களின் மீது வழக்கு போடுகிறார்கள். தமிழகத்தில் 40 இடங்களிலும் எங்கள் கூட்டணிதான் வெல்லும். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பாஜக ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினால் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த முப்பெரும் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண