பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த தேவகவுடா… அதிர்ச்சித் தகவல்…

பிரதமர் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அதற்கான நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளதால், அண்டை நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பலர் டெல்லிக்கு விரைந்த வண்ணம் உள்ளனர்.

அதே போன்று, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த‍து. ஆனால், திடீரென அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதற்கான அறிக்கையை, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாத‍தால், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பிரதமர் மோடியின் டிவிட்டர் ஐடியை குறிப்பிட்டு, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image

வரலாற்றுச் சிறப்புமிக்க இன்ற மூன்றாவது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பங்கேற்க தன்னுடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று வேதனையோடு தெரிவித்துள்ள தேவகவுடா, இந்த நிகழ்ச்சியின் நேரலையை தொலைக்காட்சி மூலம் பார்க்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கியதில் இருந்தே மன அழுத்த‍த்தில் தேவகவுடா இருந்த‍தாக கூறப்படும் நிலையில், தற்போது பிரஜ்வால் ரேவண்ணா சிறையில் இருப்பதால், மிகுந்த வருத‍த்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.