மக்களவைப் பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை தங்களது கட்சித் தொண்டர்களை தயார் செய்து வருகின்றனர். குறிப்பாக மத்தியில் ஆட்சியில் அசுரபலத்துடன் இருக்கும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிட நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் முடிவெடுத்து ஒரு அணியாக திரண்டுள்ளனர். இப்படியான நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் உள்ள பொறுப்பாளர்களை சந்தித்து திட்டமிடவும் தேர்தல் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கவும் முடிவெடுத்துள்ளது. இப்படியான நிலையில், இன்று அதாவது திமுக தரப்பில் இருந்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்வது குறித்து அறிக்கை வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில்,
”தமிழ்நாடு முதலமைச்சடும் திமு கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது தமிழ்நாடு முதலமைச்சரும் திமு கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள்,பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட “நிர்வாகிகள் சந்திப்பு” கீழ்க்கண்ட அட்டவணைப்படி. சென்னை, அண்ணா சாலை. “அண்ணா அறிவாலயத்தில்”நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நாளை மறுநாள் தொடங்கி அதாவது ஜனவரி 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் விபரம்
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் திமுகவே நேரடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள் என்பதால் உட்கட்சிப் பூசல்கள் இந்த நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.