அதிமுகவின் பெயர், கட்சியின் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு எதிராக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை எதிர்த்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர், இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை தேர்ந்தெடுத்த போதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், தேர்தல் நடத்தப்பட்டு, போட்டியின்றி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே தொடர்ந்து லெட்டர் பேட் பயன்படுத்தி அறிக்கை விடுவது, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது என்று, அதிமுகவின் தனி பிரிவு போன்று செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், அதிமுகவின் கொடி, பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இதனால், அவரது காரில் இருந்த அதிமுகவின் கொடி அகற்றப்பட்டது. இதையடுத்து, அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படாத நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால், இன்றே விசாரணைக்கு எடுக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பின் முறையீடு காரணமாக, அதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று அதிமுக தரப்பு ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இடைக்காலத் தடைக்கு தடை பெற்றால், அவர்களுக்கு வெற்றி கிடைத்து விடும் என்பதால், கிடைக்க விடாமல், தங்களுக்கு கிடைத்த வெற்றியை நிரந்தரமாக்குவது எப்படி என்று ஆலோசித்து வருகின்றனர்.