திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் ஆலையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மரணத்துக்கு, ஆலையில் முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தராததே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர், கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த உமாராணியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்பதே ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை என குறிப்பிட்டுள்ள அவர், முறையான பாதுகாப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே, ஒரு பெண் தொழிலாளி தன் தலைமுடி சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த உமாராணியின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம், ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார்.