இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஜனவரி 25 முதல் தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளுக்கான தனது பெயரை வாபஸ் பெற்றார். இப்போது விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரரை பிசிசிஐ தேர்வுக்குழு சேர்க்க விரும்புகிறது என்பதுதான் கேள்வி. இத்தகைய சூழ்நிலையில், அனுபவ வீரர் சேதேஷ்வர் புஜாரா அல்லது அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார்களா என்ற கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்பதுதான்.

கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியை இந்திய அணி அறிவித்தது. விராட் கோலி தற்போது விலகியதற்கு பிறகு, இன்னும் 15 வீரர்கள் அணியில் உள்ளனர். விராட்டின் மாற்று வீரர் இங்கு அறிவிக்கப்பட்டாலும், தற்போதுள்ள 15 பேர் கொண்ட அணியில் இருந்து மட்டுமே விளையாடும் 11-ஐ தேர்வு செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டே பிசிசிஐ, விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரரை அறிவிக்கும். விராட் இல்லாத பட்சத்தில் சுப்மன் கில் நம்பர் 3 விளையாடினால், 4வது இடமான மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது உறுதி.

விராட் கோலிக்கு பதிலாக ரஹானே அல்லது புஜாரா மாற்று வீரராக அறிவிக்கப்படுவது கடினமே. இவர்கள் இருவருக்குப் பதிலாக தற்போது இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கவே பிசிசிஐ விரும்புகிறது. இதையடுத்து, கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் பெயரே அதிகளவில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

ரஹானே திரும்புவது ஏன் கடினம்?

ரஞ்சி கோப்பையின் இந்த சீசனில் அஜிங்க்யா ரஹானே சொதப்பி வருகிறார். கடந்த இரண்டு ரஞ்சி போட்டிகளில் விளையாடி மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும், இரண்டு முறை அவர் டக் அவுட் ஆகியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், ரஹானே இந்திய அணிக்கு திரும்புவது தற்போதைக்கு சாத்தியமற்றது. ரஹானே கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார்.

புஜாரா நல்ல ஃபார்மில் இருக்கிறார் ஆனால்…

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சேதேஷ்வர் புஜாரா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். இதன் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், ரஞ்சி கோப்பையில் புஜாரா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மூன்று ரஞ்சி போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 444 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு இரட்டை சதமும் அடங்கும்.

புஜாரா தற்போது ரஞ்சி கோப்பையில் நல்ல பார்மில் இருப்பதாகத் தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த காலகட்டத்தில் புஜாரா இன்னும் சில நல்ல இன்னிங்ஸ்களை ரஞ்சியில் விளையாடினால், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் இடம் கிடைக்கலாம். இருப்பினும், இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இந்திய இளம் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இப்படியான சூழ்நிலையில், புஜாராவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது அரிதே.