நாமக்கல் மண்டலத்தில் வரலாறு காணாத வகையில், புதிய உச்சமாக முட்டை கொள்முதல் விலையானது ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4-ந் தேதி வரை 4 ரூபாய் 75 காசுகளுக்கு, கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பின்னர் நாள்தோறும் நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில், 5 காசுகள், 10 காசுகள் என படிப்படியாக கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
இதன்காரணமாக வரலாறு காணாத வகையில், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் புதிய உச்ச விலையாக 5 ரூபாய் 70 காசுகளுக்கு முட்டை விலை உயர்ந்தது. இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மீண்டும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது.
இதன் மூலம், வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்ச விலையான 5 ரூபாய் 75 காசுகள் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் காரணமாக இன்று முதல் 5 ரூபாய் 75 காசுகளுக்கு பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
வட மாநிலங்களில் குளிர் காலம் என்பதாலும், கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வருவதாலும் முட்டை அதிகளவில் விற்கப்படுவதால், விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீவனம் உள்ளிட்ட இதர செலவுகளை கணக்கிடும் போது, ஒரு முட்டை 6 ரூபாய்க்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்தால்தான் சமாளிக்க முடியும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முட்டை விலை உயர்வால், ஆம்லெட் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான கடைகளில் ஆம்லெட் 15 ரூபாய்க்கும், அரை முட்டை போண்டா 10 ரூபாய்க்கும், முழு முட்டை போண்டா 15 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வரும் நிலையில், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.