edappadi palanisamy announcement to protest about megatatu water issue


ADMK Protest: மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக போராட்டம்:
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் 2023-2024ஆம் ஆண்டு கர்நாடகம் நமக்குத் தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக இந்த விடியா திமுக அரசு பெறாததன் விளைவாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்து, சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர்.
குறுவை சாகுபடிக்கு, இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் பயிர்க் காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ரூ. 84,000/- நிவாரணத்தையும் பெற முடியவில்லை.
தேசியப் பேரிடர் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13,500/-த்தில் இருந்து ரூ.17,000/-ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில், இந்த விடியா திமுக அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13,500/- மட்டுமே அறிவித்திருந்தது. எனவே நான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 34,000/- வழங்க வேண்டுமென்று பலமுறை இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தினேன். ஆனால், கிணற்றில் போட்ட கல்லைப் போல், இந்த விடியா திமுக அரசு, விவசாயிகளுக்கு நாம் வலியுறுத்திய நிவாரணத்தை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை இந்த விடியா திமுக அரசு பெறாததால், இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் பயிரைக் காப்பற்ற உயிர் தண்ணீராக, குறைந்தது 10 டி.எம்.சி. தண்ணீரையாவது விடுவிக்க டெல்டா விவசாயிகள் இந்த விடியா திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இந்த அரசு தனது கூட்டாளி காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மீதமுள்ள பங்கு நீரைப் பெறவில்லை. எனவே, டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முடியாமல், வெறும் 2 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து காலம் கடந்து திறந்தது. இதனால் ஓரளவு மட்டுமே பயிர்கள் காப்பாற்றப்பட்டது.
மேகதாது விவகாரம் தொடர்பாக போராட்டம்:
காவிரி நதி தமிழ் நாட்டின் ஜீவநதி. மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக தடுக்கப்படும்; மேட்டூர் அணை வறண்டுவிடும்; டெல்டா பாசனப் பகுதி பாலைவனமாகிவிடும்; காவிரியை குடிநீர் ஆதாரமாக நம்பியுள்ள 20 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள். 
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும்; தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளைக் கண்டித்தும்; கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத விடியா திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில், 29.2.2024 – வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண

Source link