DMK MP Dhayanidhi maran slams pm modi and FM nirmala sitharaman in parliament | Dhayanadhi Maran: வன்மத்தில் நிர்மலா சீதாராமன்; கோழி பிடிப்பவரை போன்று பேசும் பிரதமர் மோடி


Dhayanadhi Maran On Modi: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் பேசுவதாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். 
”வன்மத்தில் பேசும் நிர்மலா சீதாராமன்”
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி, தற்போது இரு அவைகளிலும் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதி வழங்காதது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் உரையாற்றினார். அப்போது, ”ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் பேசுகிறார். ஏழைகள் படும் கஷ்டத்தை அறியாதவர் அவர். தமிழ்நாடு அரசு ரூ.37000 கோடி வெள்ள நிவாரணம் கேட்டு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. வெள்ள பாதிப்பை பார்வையிட நிர்மலா சீதாராமன் வந்தார், கையசைத்தார், சென்றார். இதுவரைக்கும் எங்களுக்கு வந்தது பூஜ்ஜியம்தான். வரிப்பணத்தை கேட்டதற்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒரு மணி நேரம் தமிழ்நாடு அரசை வசைபாடினார்.
”குறைக்கப்படாத எரிபொருள்  விலை”
கோவிட்டுக்கு பிறகு பெட்ரோல் விலையையும், கேஸ் விலையையும் ஏற்றிவிட்டீர்கள். பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டது. டீசல் விலை 100 ரூபாயை தொட்டுவிட்டது. கேஸ் சிலிண்டர் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு விற்கிறது. உக்ரைன் உடனான போரினால் ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்கிறது.  அதன் மூலமாவது விலையை குறைத்திருக்கலாமே, நீங்கள் செய்யவே இல்லையே. அதற்கு மாறாக ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், பிரதமருடன் செல்பி ஸ்டாண்ட் வைத்தது இந்த மத்திய அரசு. அந்த செல்பி ஸ்டாண்டின் விலை 6.5 லட்சம் ரூபாய்.. இது தேவையா.. அந்த பணத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் நீங்கள் செலவழித்திருக்கலாமே?
”அமலாக்கத்துறையை ஏவும் பாஜக”
காங்கிரஸ் கட்சியில் மறைந்த தலைவர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை தவறாக பயன்படுத்தினார். அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்றீர்கள். ஆனால் இன்று எமர்ஜென்சியை போலவே நீங்கள் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறீர்கள். அமலாக்கத்துறை வழக்குகளில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம், எதிர்க்கட்சியினர் மீது தான் இருக்கிறது. உங்களால் திணிக்கப்பட்டு வழக்குகள் போடப்பட்டுளளது, இதை உங்கள் லாபத்திற்காக செய்கிறீர்களா இல்லையா?
பிரதமர் மோடி மீது சாடல்:
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழில் பேசுகிறார். கர்நாடகா சென்றால் கன்னடத்தில் பேசுகிறார். தெலங்கானா சென்றால் தெலுங்கில் பேசுகிறார். மேற்கு வங்கம் சென்றால் வங்காள மொழியில் பேசுகிறார். இதை பார்க்கும் போது, எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள். கோழி பிடிக்க வருபவர் நம்மை போலவே பக்பக் என்று பேசுகிறாரே என்று கோழி நினைக்குமாம். அந்த கோழிக்கு அப்புறம் தான் தெரியுமாம். அந்த கோழியை வறுத்து சாப்பிட தான் அந்த நபர் கோழி பாசையில் பேசினான் என்று. அதேபோல் தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார்.

மேலும் காண

Source link