திமுகவில் பல சீனியர் அமைச்சர்கள் உள்ளதாகவும், அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வேண்டாம் என்பாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முழு விவரத்துடன் தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறினார். குறிப்பிட்ட ஒரு குறை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஜான் பாண்டியனுக்கு மட்டுமல்லாமல் திருமாவளவன், சீமான் போன்றவர்கள் உயிருக்கு ஆபத்து என பாதுகாப்பு கோரினால், அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தினார்.
திமுகவில் பல சீனியர் அமைச்சர்கள் உள்ளதாக தெரிவித்த அவர், அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி என்றால் யார் வேண்டாம் என்று கூறுவார்கள்? என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.