கடலூரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தாய் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என்பதால் குடும்பத்துடன் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்ட சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூர் காராமணி குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐடி ஊழியரான சுதன் குமார், அவரது தாயார் கமலேஸ்வரி, அவருடைய மகன் நிஷாந்தன் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டனர்.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த மூன்று கொலை வழக்கில், குற்றவாளிகள் யார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறையினர் குழப்பத்தில் இருந்தனர். இதனால், பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்ததால், காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது.
இதனால் கடந்த ஒரு வாரமாக 7 தனிப்படைகளை அமைத்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே தெருவில் வசிக்கும் சங்கர் ஆனந்த் என்ற 21 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உதவி செய்ததாக, அவருடைய நண்பர் சாகுல் ஹமீது என்ற 20 வயது இளைஞரையும் கைது செய்த விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு தகவல்கள் வெளியாயின.
கொலை செய்த போது, சங்கர் ஆனந்தின் கையில் கத்தி பட்டு, அப்போதே ஒரு விரல் துண்டானது தெரிய வந்துள்ளது. தந்தையை இழந்து, தாயின் வளர்ப்பில் சங்கர் ஆனந்த் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சங்கர் ஆனந்தின் தாய், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதற்கு காரணம், கொலை செய்யப்பட்ட சுதன் குமார்தான் காரணம் என்று சங்கர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனாலும், சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்ட கமலேஸ்வரி, தன்னை அநாதை என்று திட்டியதாலும், ஆத்திரமடைந்து வீடு புகுந்து மூன்று பேரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை கொலை செய்த பின்னர், திங்கட்கிழமை அதிகாலை, தனது நண்பர் சாகுல் ஹமீது உடன் சேர்ந்து, மீண்டும் கொலை செய்த வீட்டுக்கு சென்று, மூன்று உடல்களுக்கும் தீ வைத்து எரித்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவாரமாக கடலூர் மாவட்ட மக்களுக்கு தூக்கத்தை பறித்த இந்த கொலை வழக்கில், தற்போது, யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரிய வந்துள்ளதால், சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.