<p>கன்னியாகுமரி மாவட்டம் அருகே தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலனியில் வசிப்பவர் அபிஜித் (வயது 33). இவர் ரப்பர் தொழில் கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரஞ்சிதாவிற்கு (வயது 25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ரஞ்சிதா தற்போது 9 மாதம் கருவுற்று இருக்கிறார். இவருக்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக புதுநகருக்கு தாய் வீட்டார் அழைத்து சென்றுள்ளனர்.</p>
<p>இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவி ரஞ்சிதாவை பார்ப்பதற்கு அபிஜித் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரஞ்சிதா மது பழக்கத்தை கைவிடுமாறு கணவன் அபிஜித்திடம் கூறியுள்ளார், இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.</p>
<p>சண்டை முற்றிப்போன நிலையில், ரஞ்சிதா ஆத்திரமடைந்து வீட்டிற்குள் சென்று, மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். மளமளவென தீ பிடித்த நிலையில் ரஞ்சிதா உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. ரஞ்சிதா தீ குளித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் அபிஜித், அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.</p>
<p>இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அலறி அடித்து ஓடி, அவர்கள் இருவரை பற்றி எரியும் தீயில் இருந்து மீட்டனர். பின் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கீரிப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 9 மாத கருவுற்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>