விசிக பிரமுகரும் பிக் பாஸ் பிரபலமுமான விக்ரமனின் மீது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் விக்ரமன். விசிகவில் மாநில இணை செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் மீது, இளம்பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், இரண்டு ஆண்டுகளாக விக்ரமன் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி தன்னிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் இணைய தளம் மூலம் கிருபா புகார் அளித்திருந்தார்.
இது மட்டுமின்றி, சாதி ரீதியாகவும் அசிங்கப்படுத்தி, பாலியல் ரீதியாகவும் தன்னைத் துன்புறுத்தியாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, விக்ரமன் மீது விசிகவிலும் புகார் கொடுத்தும், கட்சியில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றுள்ளதாக புகாரின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விசிகவிலும் போலீஸிலும் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், வழக்கறிஞராக உள்ள கிருபா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விக்ரமின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விக்ரமன் மீது, இந்திய தண்டனை பிரிவு சட்டம் மோசடி 406, நம்பிக்கை மோசடி 420 மோசடி,376 பாலியல் வன்கொடுமை,499 ,500 அவதூறு பரப்பியது,506(I) 506 (ii) கொலை மிரட்டல்,507 அவமதித்து சுற்ற விடுதல்,66A,66E,67, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காகவும், SC ST PREVENTION தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், TNPWH ACT பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.