Byjus Crisis: இந்தியா முழுவதும் அலுவலகங்களை மூடும் பைஜூஸ்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெட்டிங் மூலம் மிகப்பெரிய சந்தையை பைஜூஸ் பிடித்தது.

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பைஜூஸ் நிறுவனம்:

இதனை உலகம் முழுவதும் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது பைஜூஸ். கடந்த 2022 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு, 2,500 ஊழியர்களையும், கடந்த ஆண்டு 1,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது பைஜூஸ்.

மேலும் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படாது என்று சி.இ.ஓ. ரவீந்தரன் தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது பைஜூஸ். வருமானம் குறைந்ததோடு, பைஜூஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதும் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடன் வாங்கல், கொடுக்கல் தொடர்பான பிரச்சனையில் பைஜூஸ் நிறுவனம் சிக்கியள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனால், பைஜூஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 75 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிகிறது. செலவுகளை குறைக்க பைஜூஸ் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தலைமை செயல் அதிகாரி எடுத்த அதிரடி முடிவு:

அதன் தொடர்ச்சியாக, பெங்களூருவில் உள்ள தலைமையகத்தை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களை பைஜூஸ் நிறுவனம் காலி செய்துள்ளது. இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் காலவரையின்றி வீட்டில் இருந்து பணிபுரியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இயங்கி வரும் பைஜூஸ் கல்வி மையங்களில் பணிபுரிபவர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். பங்கு சந்தையில் பைஜூஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தால் முதலீட்டாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது.

இம்மாதிரியான நெருக்கடியான சூழலில், பிப்ரவரி மாதத்திற்கான சம்பளத்தின் ஒரு பகுதியை 75 சதவிகித ஊழியர்களுக்கு பைஜூஸ் நிறுவனம் தரவில்லை என கூறப்படுகிறது. பல நாள்கள் கழித்துதான் அந்த சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பங்கு சந்தையில் கிடைத்த பணத்தை பயன்படுத்த அனுமதி கிடைத்த பிறகு, மீதமுள்ள சம்பளம் வழங்கப்படும் என ஊழியர்களுக்கு பைஜூஸ் உறுதி அளித்துள்ளது.

நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் பைஜூஸ் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அர்ஜுன் மோகன் எடுத்த முடிவின்படியே, இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பைஜூஸ் நிறுவனத்தில் 14,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link